எமது பாடசாலையின் வரலாறு

சைவமும் தமிழும் வீரமும் தழைத் தோங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்தின் வடக்கே முல்லை மாநகரின் யாழ் – கண்டி A9 நெடுஞ்சாலையில் மாங்குளம் சந்தியில் இருந்து மேற்கே பதினாறு கிலோ மீற்றர் தூரத்தில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் மல்லாவி என்னும் பழமை வாய்ந்த கிராமம் அமைந்து ள்ளது. காடும் காடு சார்ந்த இடங்களும், வயலும் வயல்வெளிகளும், சிறுகுளங்களும், குட்டைகளும் வரலாற்றுப் புகழ்மிக்க வன்னிவிளான்குளம் அம்மன் ஆலயமும் இடையிடையே சிறு கிராமங்களும் இருமருங்கும் காட்சியளிக்க மாங்குளம் துணுக்காய் பிரதான வீதி மல்லாவிச் சந்தியை வந்தடைகின்றது. வன்னியின் கடைசி மன்னன் பகைக்கு அடிபணியாத தமிழன் பண்டார வன்னியனின் சிலை கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் வீதியூடாக சுமார் ஐந்நூறு மீற்றர் தூரத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை கடந்து செல்லும் போது கொன்றை மரம் பொன்பூச் சொரிந்து வரவேற்க யோகபுரம் மத்திக்குச் செல்லும் வீதியில் மு/யோகபுரம் மகா வித்தியாலயம் எனப் பொறிக்கப்பட்ட அழகிய நுழைவாயிற் தென்படுகிறது. நுழைவாயிற் பாதையின் இருபக்கமும் உள்ள மலை வேப்ப மரங்கள் காற்றில் ஆடி அசைவது எம்மை வரவேற்பது போல அமைந்துள்ளது. அச் சோலையினுள்ளே, “கல்விச் சாலையிலே கண்களில் கருணை நிறைந்து அறிவுதனை அள்ளித்தரும் – தாய் அமர்ந்திருக்கும் பாங்கே தனி” இக்கலைமகளின் சிலையின் பின் தாய்க் கட்டடங்களோடு மாடிக்கட்டடங்கள் பலவற்றை யும் ஏனைய கட்டடங்கள் யாவற்றையும் இணைத்து உயர்ந்து நிமிர்ந்து நிற்பது அற்புதமான காட்சி. வைரவிழாக் காணும் யோகபுரத்தாயின் இன்றைய கோலமிது. அந்நியரின் ஆட்சி நம் நாட்டில் புகுவதற்கு முன் இன்று அபிவிருத்திப் பாதையை நோக்கிக் கால் பதித்திருக்கும் வன்னிப் பெருநிலப் பரப்பு பொருளாதார வளம் நிறைந்ததாகவும், சமயப் பண்புகளோடு தமிழ்ப்பற்றும், நாட்டுப் பற்றும் ஒழுக்கமும் வீரமும் இணைந்து காணப்பட்டதாகச் சரித்திரங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. காடும் காடு சார்ந்த இடங்களையும், வயலும் வயல் சார்ந்த இடங்களையும் உள்ளடக்கியதாகவும் பாரிய நீர்த்தேக்கங்களையும் கொண்டதாக அமைந்துள்ளமை வந்தோரை வாழவைக்கும் வன்னி மண்ணின் தனிச் சிறப்பாகும். எமது நாடு சுதந்திரமடைந்த பின் அரசியல் தலைவர்கள் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் பலவற்றில் ஈடுபட்டனர். இன மத பேதமின்றி அவர்களது சேவை காணப்பட்டது. அதன் தொடராக கௌரவ திரு.D.S.சேனநாயக்கா, திரு.S.W.R.Dபண்டார நாயக்கா, திரு.வீ. குமாரசாமி, திரு.தி.முருகேசுப்பிள்ளை, திரு.ம. ஸ்ரீகாந்தா ஆகியோரின் விடாமுயற்சியினால் வன்னிப் பெருநிலப்பரப்பின் பாரிய நீர்த்தேக்கமான வவுனிக்குளம் புனரமைக்கப்பட்டது. இக்குளத்தின் பெயராலேயே 1958ம் ஆண்டு வவுனிக்குளக் குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண நற்பதியில் வாழ்ந்து அறநெறி வழங்கிய யோகர் சுவாமிகளைத் தம் குருவாகக் கொண்ட திரு.ம.ஸ்ரீகாந்தா வலது கரைப்பகுதிக்கு “யோகபுரம்” எனும் நாமத்தினையும் இடது கரைக்கு செல்லப்பா சுவாமிகளின் நினைவாக “செல்வபுரம்” எனும் நாமத்தையும் சூட்டினார். வலது கரைப் பகுதியான யோகபுரத்தில் வாழும் குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் கல்வி வசதி கருதி 01.06.1962 இல் அரசினர் பாடசாலை 1ம்பகுதி, 3ம் யூனிற் என்ற பெயருடன் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுடன் பாடசாலை யின் வரலாறு ஆரம்பமாகின்றது. அப்போது வடமாகாண பிரதம வித்தியதிகாரியாக பணிபுரிந்த திரு.க.கனகசபாபதி அவர்களால் இப்பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 35 மாணவருடன் தலைமையாசிரியராக திரு.வே. இளையதம்பியும் ஆசிரியராக அவரது மனைவி திருமதி இளைய தம்பியும் கடமையாற்றினார்கள். தங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு பாடசாலை அமையப்பெற்றதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்ட பெற்றாரின் ஒத்துழைப்புடன் பாடசாலை சிறப்பாக இயங்கத் தொடங்கியது. 30.04.1963ல் தலைமை யாசிரியர் மாற்றலாகிச் செல்ல 01.05.1963 இல் திரு.இ.கந்தசுவாமி தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று கடமையே கண்ணாகக் கருத்திச் சேவை செய்த இவரது காலப்பகுதியில் முதன் முதலாக க.பொ.த சா/த பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றினார்கள். கலைவிழா, கூட்டுறவு தினவிழா போன்ற விழாக்கள் நடைபெற்றமை பாடசாலை யின் புறச் செயற்பாடுகளுக்கு வழிசமைத்தது. தலைமையாசிரியர் 04.02.1966இல் மாற்றலாகிச் சென்றபின் வடகாட்டில் இருந்து வடக்கன் மாட்டு வண்டியில் தமது பிள்ளைகளோடு வந்திறங்கும் தலைமையாசிரியர் திரு.க.பெரியதம்பி அவர்கள் 05.02.1966 இல் பாடசாலையை பொறுப்பேற்றார். இவரது அயராத சேவையை அன்றிருந்த அனைவரும் நன்கறிவர். இவரது காலத்திலே 1968ம் ஆண்டு யோகபுரம் மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது. இந்நிகழ்வு வரலாற்றுப் பாதையின் முக்கிய பதிவாகியது. 30.06.1968இல் இவர் மாற்றலாகிச் சென்றார். பாடசாலையின் வளர்ச்சியோடு தலைமை யாசிரியர் என்ற பதவி அதிபர் என்ற நிலைக்கு மாறியது. அந்தவகையில் முதல் அதிபராக திரு.A.B.சேனாதிராஜா அவர்கள் 01.07.1968 இல் தனது கடமையைப் பொறுப்பேற்று 21.05.1969 வரை செவ்வனே பணிபுரிந்தார். 22.05.1969 – 03.08.1969 வரையான காலப்பகுதியில் சில மாதங்கள் அதிபர் திரு.எம்.சச்சிதானந்தம் அவர்கள் பணியாற்றினார். தொடர்ந்து அதிபர் திரு.வே. நாகராசா 04.08.1969 – 22.03.1970 வரை சில மாதங்கள் சேவையாற்றினார். தொடர்ந்து 23.03.1970 இல் அதிபர் திரு.ஆ.காசிநாதர் அவர்கள் தனது பணியினைத் தொடந்தார். இவரது காலத்தில் கல்வித் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு விஞ்ஞானம், கணிதம், விவசாயம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களைப் பெற்று கல்வி வளர்ச்சிக்குத் துணை புரிந்தார். இவரது காலத்தில் 1972இல் “பத்தாவது ஆண்டு நிறைவு விழா” நடை பெற்றதோடு நிறைவு விழா மலரும் வெளியீடு செய்யப்பட்டமை வித்தியாலய வரலாற்றில் முக்கிய பதிவாகியது. 01.04.1973 வரை தனது கடமையை நிறைவாக ஆற்றியவர் என்ற பெருமைக்குரியவர் இவராவார். அடுத்து வித்தியாலயத்தின் பொறுப்பை அதிபர் திரு.எஸ். சிவவாகீசன் ஏற்று 02.04.1973- 01.05.1976 வரை பணியாற்றினார். ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தானே வகுப்புக்களில் ஆங்கிலம் கற்பிப்பார். இவரின் சேவைக்காலமும் பாராட்டிற்குரியதாகும். 02.05.1976-31.12.1977 வரை அதிபர் திரு.இ.கந்தவனம் அவர்கள் தனது பணியினைச் சிறப்பாக ஆற்றினார். தொடர்ந்து அதிபர் திரு.K.தவராசா அவர்கள் (01.01.1978 – 31.03.1978 வரை) சில மாதங்கள் சேவையாற்றியுள்ளார். இவரை அடுத்து அதிபர் திரு.சிவபாலு அவர்கள் (01.04.1978 – 31.03.1982 வரை) சேவையாற்றியுள்ளார். க.பொ.த சா/தரத்தில் இரண்டாம் தடவை தோற்றும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புக்களை நடாத்தினார். பெற்றாருடன் நெருங்கிய உறவைப் பேணிய இவர் பாடசாலை வேலி அடைத்தல் உட்பட பல வேலைகளை தானே ஏற்று நடத்தியமை அவரின் சேவைக்கு எடுத்துக்காட்டாகும். வித்தியாலய வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் சிறப்பாக சேவையாற்றிய நல்லாசானும் அதிபருமாவார். அதிபர் திரு.தா.சிவசம்பு அவர்கள் 01.04.1982 தொடக்கம் பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார், சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட இவர் தனது சேவையை முழுமையாக வழங்கியவர். ஆசிரியர்களை அன்புடன் வழி நடத்தும் இவரது பண்பு பாடசாலையின் வளர்ச்சிக்கு மேலும் உதவியது. இவரது சேவைக் காலத்திலேயே க.பொ.த (உ/த) கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டமை வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சிப் பாதையில் அடுத்த படிக்கல்லாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. 01.07.1985 வரை சிறப்பான சேவையாற்றிய இவர் மாற்றலாகிச் சென்றபின் 03.07.1985 இல் அதிபர் திரு.ச. பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடசாலைப் பொறுப்பை ஏற்று நடாத்தினார். இவரது காலத்தில் தான் க.பொ.த (உ/த) 10.09.1985 கலைப்பிரிவு உத்தியோக பூர்வமாக அனுமதிக் கடிதத்துடன் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடமையுணர்வுடன் தனது கடமையை ஆற்றிய இவர் 14.03.1988 இல் மாற்றலாகிச் சென்றார். தொடர்ந்து பாடசாலைப் பொறுப்பை பிரதி அதிபர், திருமதி பு.நடராசா அவர்கள் ஏற்று நடாத்தினார். 27.04.1988 இல் அதிபர் திரு.ச.சண்முகவடிவேல் பொறுப்பேற்று 13.03.1990 வரை தனது சேவையை வழங்கி கல்வி வளர்ச்சிக்குத் துணை புரிந்துள்ளார். எமது பிரதேசத்தைச் சேர்ந்தவரும் வித்தியாலய வளர்ச்சிப்படிகள் அனைத்திற்கும் தன் அயராத உழைப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கி வந்த திருமதி புவனேஸ்வரி நடராசா அவர்கள் தமிழ், ஆங்கிலம் என்பவற்றைக் கற்பிக்கும் நல்ல ஆசானாகவும் பிரதி அதிபராகவும் கடமை புரிந்தவர். 14.03.1990 – 29.01.1991 வரை பாடசாலைப் பொறுப்பை ஏற்று தனது அனுபவங் களோடு வித்தியாலயத்திற்கு நிறைவான சேவையை வழங்கினார். இவரது சேவை பாராட்டிற்குரியதாகும். இளமையும் சுறுசுறுப்பும் கொண்ட அதிபர் திரு.க.எழில் வேந்தன் அவர்கள் 30.01.1991 முதல் தனது பணியை ஏற்றுக் கொண்டார். அனுபவமுள்ள ஆசிரியர்களோடு இணைந்து தனது ஆளுமையையும் சேர்த்து மிகச் சிறப்பாக பணிபுரிந்தார். யாழ் இடப்பெயர்வுக் காலத்தில் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வெற்றிகரமாக பாடசாலையின் வளர்ச்சியை நகர்த்திச் சென்ற இவர் 02.10.1996இல் மாற்றலாகிச் சென்றார். அதிபர் திரு.அ.மு.அருணாசலம் அவர்கள் 02.10.1996 – 08.06.1998 வரை தனது பணியினை ஆற்றினார். இவரது காலத்தில் பாடசாலை பல நிலைகளிலும் வளர்ச்சியடைந்தது. க.பொ.த (சா/த) பரீட்சையில் செல்வன் வி.ஜீவகன் மாவட்ட நிலையில் முதல் மாணவனாக 8D பெறுபேறு களைப் பெற்றார். இச் செயற்பாடானது வித்தியாலய கல்வி வளர்ச்சியின் தனது முத்திரை யைப் பதித்தது. 1998இல் தனது 36வது அகவை நிறைவைக் கண்டு மகிழ்ந்த வித்தியாலயம் ‘யோகதாரகை’ என்ற இரண்டாவது மலரைப் பிரசவித்த பெருமையோடு நிமிர்ந்து தனது வரலாற்றுப் பாதையின் பதிவைக் கனமாகப் பதித்தது. 08.06.1998 – 02.09.1998 வரை பதில் அதிபராக திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளை அவர்கள் கடமையாற்றியுள்ளார். 03.09.1998 30.12.1998 வரை சில மாதங்கள் பாடசாலையைப் பொறுப்பேற்று நடாத்திய அதிபர் திரு.சி. சிவப்பிரகாசம் அவர்கள் துணுக்காய் கல்வி வலயத்திற்கு பதவி உயர்வு பெற்றுச் சென்றார். தொடர்ந்து அதிபராக திருமதி கமலராணி கிருஸ்ண பிள்ளை அவர்கள் 01.01.1999 – 28.02.2007 வரை சேவையாற்றியுள்ளார். நிர்வாகத் திறனும் பேச்சாற்றலும் உடைய இவர் பழைய மாணவருடன் நெருங்கிய தொடர்பு டையவர். அதிபராக, ஆசிரியராக 23 வருடங்கள் சேவையாற்றியவர். இவர் தனது காலத்தில் மாணவர் மனங்களை வென்றுள்ளமைக்கு பாடசாலையில் 2002 O/L மாணவர்கள் சரஸ்வதி சிலை அமைத்து அவராலேயே திறந்து வைத்தமை சான்று பகர்கின்றது. இவரைத் தொடர்ந்து எமது பிரதேசத்தைச் சேர்ந்த திரு.த.யோகானந்தராசா அவர்கள் 01.03.2007 இல் அதிபராகத் தனது கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவரது காலம் இடப்பெயர்வும் மீள் குடியேற்றமும் மனதில் மறக்க முடியாதபடி பதிவாகிய நிகழ்வுகள் நிறைந்த காலமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஈழப் போராட்டத்தை முடிவுறுத்தி மீள்குடியேற்றம் 29.12.2009 இல் ஆரம்பிக்கப்பட்ட பின் மல்லாவிப் பிரதேசத்தில் முதலில் கௌரவ ஆளுநர் G.A. சந்திரசிறி அவர்களால் முல்லைத் தீவு யோகபுரம் மகா வித்தியாலயம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். பாடசாலையின் ஆவணங்களை 2007 இடப் பெயர்வின் போது விசுவமடு ம.வியில் விட்டுச் சென்று பின் எஞ்சியவற்றை மீள எடுத்து வந்தமை இவரது சிறந்த கடமையுணர்விற்கு எடுத்துக் காட்டாகும். 2012 இல் யோகபுரத்தாய் “பொன்விழா” கண்டது பொருத்தமாக அமைந்தது. பொன்விழா ஆண்டில் நாட்காட்டி வெளியீடு, பரிசளிப்பு, கலைநிகழ்வுகள் போன்றவற்றை நடாத்தியதுடன் யோகபுரத்தாயின் மூன்றாவது மலரான பொன்விழா சிறப்பு மலர் வெளியீடு செய்தமை வித்தியாலய வளர்ச்சியின் சிறப்பான பதிவாகின்றது கா.பொ.த (உ/த) வர்த்தகப் பிரிவு 2012 இல் துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளார் திரு.மேகநாதன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டமை கல்வி வளர்ச்சிப் பதையின் அடுத்த வெற்றியைக் காட்டி நிற்கின்றது. 2012 இல் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எமது பாடசாலை யையும் உள்வாங்கப்பட்டதற்கு அமைவாக 2013ம் ஆண்டு ஆரம்பப்பிரிவு மாணவர்கள் முல்லைத்தீவு அணிஞ்சியன்குளம் தமிழ் வித்தியாலயத்திற்கு இணைக்கப்பட்டனர். 6-12 வரையான வகுப்புக்கள் இங்கு நடைபெற்றன. 2013ம் ஆண்டு இப்பாடசாலை 1AB பாடசாலையாக தரமுயர்த்த ப்பட்டதும் இவ் அதிபருடைய காலத்திலேயாகும். க.பொ.த (சா/த) பெறுபேறுகளின் அடிப்படையில் 29.04.2013 இல் க.பொ.த. (உ/த) கணித விஞ்ஞானப் பிரிவு துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை மு/யோகபுரம் மகா வித்தியாலயம் தன் கல்வி வளர்ச்சிப் பாதையில் விடாமுயற்சியுடன் பயணித்து தன் காலடிகளைப் பதித்துவிட்டமை வரலாற்றில் உன்னதமான வெற்றியாகும். கணித விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கபட்டு பரீட்சைக்குத் தோற்றிய முதல் வருடத்திலேயே கணிதப்பிரிவில் ம.தரண்யா, சி.நிறோஜன் ஆகியோரும் விஞ்ஞானப்பிரிவில் பி.மிதுசனும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி யமை யோகபுரம் மகாவித்தியாலயத்தின் கல்விப்பயணத்தின் மைல்கல் என்றே கூறலாம். வித்தியாலயத்தின் முன்பிருந்த நுழை வாயில் பக்கமாக அமைக்கப்பட்டுள்ள மதிலினை கனடா வாழ் பழைய மாணவர்களும் சங்கீத அறையினை சுவிஸ் வாழ் பழைய மாணவர்களும், முன்புறம் உள்ள கேற்றினை புகழேந்தி நகர் மனோன்மணி அவர்களும், பிள்ளையார் ஸ்தாபனத்தினரும் அன்பளிப்பாக வழங்கியமை இவரது சமூகத் தொடர்பினைக் காட்டி நிற்கின்றது. கல்வி வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றத்தினைக் காட்டி நின்ற அதிபர் திரு.த.யோகானந்தராசா அவர்கள் 01.07.2015 இல் இடமாற்றம் பெற்றுச் சென்றார், இவ்வித்தியாலயத்தில் இவரது சேவைக்காலமும் சிறப்பானதாக அமைந்தது. இப்பாடசாலையின் பழைய மாணவனாகிய அதிபர்.திரு.கு.ஜெகதீஸ்வரன் அவர்கள் 02.07.2015 இல் தனது பணிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். மாணவர்களின் பிரச்சினை களை இனங்கண்டு இலகுவாகத் தீர்த்து வைப்பதோடு ஆசிரியர்களுக்கு தேவையான இடத்தில் ஆலோசனைகளை வழங்கி வழிப் படுத்துவார். மாணவரின் துவிச்சக்கர வண்டிகளைப் பாதுகாப்பதில் பல சிரமங்களை எதிர் நோக்கியதை கருத்திக் கொண்டு கனடா, இலண்டன் பழைய மாணவர்களின் உதவியுடன் 2016ல் செயற்பட்ட S.D.C செயலாளர் , உறுப்பினர்கள் இணைந்து துவிச்சக்கரவண்டி தரிப்பிடத்தை அமைத்தமை குறிப்பிடத்தக்கது. 2016இல் இடம்பெற்ற தேசிய மட்ட தமிழ்த்தின போட்டியில் (சிறுகதையாக்கம்) 1ம் இடத்தை செல்வி இ.பிரியங்கா பெற்றுள்ளமை இவரது காலத்திலேயே ஆகும். அத்துடன் அதே ஆண்டு க.பொ.த (உ/த) வர்த்தகப்பிரிவில் முதல் முதலாக ஆ.தவச்செல்வி, K.வேனுஜா ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானமை குறிப்பிடத் தக்கதாகும். க.பொ.த (உ/த) 2017இல் பரீட்சைக்குத் தோற்றிய செல்வன் வசந்தராஜன் சாரங்கன் கணிதப்பிரிவில் 3A பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட நிலையில் 1ம் இடத்தையும் வர்த்தகப் பிரிவில் செல்வன் அசோக்குமார் மிதுர்ஷன் 3A பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட நிலையில் 1ம் இடத்தைப் பெற்றமை இவரது காலத்திலேயாகும். இந்நிகழ்வானது பாடசாலை வரலாற்றின் கல்வி முன்னேற்றப்பாதையின் முக்கிய பதிவாகின்றது. யோகபுரம் வாழ் பெற்றோரின் விருப்பத் தோடும் அதிபர் S.D.C செயலாளர், உறுப்பினர்கள் ஆகியோரின் பெருமுயற்சியின் பயனாக ஆரம்பப் பாடசாலை மீளவும் இங்கு ஆரம்பிப்பதற்கு 2018 இல் அனுமதி கிடைத்ததற்கு அமைய தரம் 01 ஆரம்பிக்கப்பட்டமை அதிபரின் ஆளுமைக்கு எடுத்துக் காட்டாக திகழ்கின்றது. இன்று மு/யோகபுரம் ஆரம்பப் பாடசாலையாகத் தனித்து இயங்கி வருகின்றது. புலம்பெயர் வாழ் பழைய மாணவர்கள் தங்களுக்கென அமைப்பொன்றை உருவாக்க முன்வந்தபோது அதிபர் திரு.கு.ஜெகதீஸ்வரன் அவர்களும் பிரதி அதிபர் திருமதி புஷ்பவதி பாலசுப்பிரமணியம் அவர்களும் இணைந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்தமையால் பழைய மாணவர் அபிவிருத்தி ஒன்றியம் 24.10.2018இல் ஆரம்பிக்கப்பட்டது. இவ் ஒன்றியத்தின் நோக்கம் “மாணவரின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தல்” எனும் கருப்பொருளை முக்கியமாகக் கொண்டு அமைந்தது. நீண்டகால இடைவெளிக்குப்பின் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்ற வகையில் போருக்கு பின் மாணவரின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு வித்தியாலயத்துடன் இணைந்து செயற்பட நினைத்த நல்லெண்ணம் கொண்ட ஒன்றியத்தின் செயற்பாடு பாராட்டத்தக்க விடயமாகும். கா.பொ.த (சா/த) பரீட்சை 2018இல் 9A பெறுபேற்றைப் பெற்ற செல்வி ரஞ்சன் பிறைநிலா அவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை, சித்தி பெற்ற முப்பது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமை, அவர்களின் பெயரால் மரக்கன்றுகள் அலுவலகத்திலிருந்து நுழைவாயில் வரை நாட்டியமை யாவும் ஒன்றியத்தின் செயற்பாடுகளே. இவை இவ் அதிபர் காலத்திலேயே இடம்பெற்றது. தனது சேவையை சிறப்பாக ஆற்றிய அதிபர் 01.04.2020இல் ஓய்வு பெற்றார். பிரதி அதிபர் திரு.தி.கிரிதரன் பாடசாலையைப் பொறுப்பேற்று (02.04.2020 – 17.04.2022 வரை) நடாத்தினார். இவரது காலத்தில் கொரோனா நோய்த்தாக்கம் காரணமாக பாடசாலை நடைபெற்ற காலங்கள் குறைவாக காணப்பட்டது. இயங்கிய காலங்களில் பல சிரமங்களுக்கு மத்தியில் திறம்பட நடாத்தியுள்ளார். க.பொ.த (சா/த) 2019 பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை பழைய மாணவர் அபிவிருத்தி ஒன்றியத்தினர் பதில் ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்கி நடாத்தியமை இவரது காலத்திலேயாகும். பழைய மாணவனும் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவரும் இப்பாடசாலையை வளர்த்தெடுக்க தான் பங்காற்ற வேண்டும் என்ற பெருவிருப்புக் கொண்டவருமாகிய அதிபர் திரு.த. பிறேமச்சந்திரன் அவர்கள் 18.04.2022 இல் பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மு/யோகபுரம் மகா வித்தியாலயம் கல்வி வளர்ச்சியில் பல முன்னேற்றங்களைக் கண்டு வந்த போதும் பௌதீக வளப் பற்றாக்குறை காணப்பட்டது குறையாகவே இருந்து வந்தது. அதனை தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் கல்வி வளாச்சியினை மேலும் முன்னேற்ற தனது சேவையை அதிபர் ஆரம்பித்தார். முதற்கட்டமாக பௌதீக வளங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஒன்றியத்தின் உதவியுடன் C.C.T கமரா பொருத்தப்பட்டது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. 2022 இல் வைரவிழாவைக் கண்ட வித்தியாலயத்தின் விழாவினை சிறப்பாக நடாத்துவதற்கான ஆரம்ப ஒன்றுகூடல் லண்டன் வாழ் பழைய மாணவர்களுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு உபகரணங்கள், மேலைத்தேய வாத்திய இசைக்கருவிகள் (Band) என்பன ஆரம்பகட்டமாக ஒன்றியத்தினரால் வழங்கப்பட்டுள்ளன. வைரவிழாவுக்கான செலவினத்தையும் ஒன்றியத்தினரே ஏற்று நடாத்துகின்றனர் என்பது சிறப்பான செயற்பாடாக அமைகிறது. வைரவிழாவினைச் சிறப்பாக நடாத்துவதற்கு புலம்பெயர்வாழ் பழைய மாணவர் அபிவிருத்தி ஒன்றியம், பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம், பெற்றோர், புலம்பெயர் வாழ் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் ஒன்று கூட்டி அயராது உழைக்கும் அதிபர் பாராட்டுக்கு ரியவராகின்றார். மு/யோகபுரம் மகாவித்தியால யத்தின் நான்காவது மலராகிய “வைரநதி மலர்” பழைய மாணவர் சங்கத்தினரால் வெளியீடு செய்யப்படுகின்றது. வைரவிழா நிகழ்வு வித்தியாலயத்தின் வரலாற்றில் இன்னுமொரு பதிவாக இடம் பிடிக்கின்றது. இவ்வருடம் தேசிய தமிழ்த்தினப் போட்டியில் 2022.11.05 – 2022.11.06 ஆகிய திகதிகளில் கலந்து கொண்டு தமிழறிவு வினாவிடைப் போட்டியில் முதலாம் இடத்தை செல்வன் பிறேமானந்தன் தனோஜன், செல்வன் மதிவண்ணன் பிரவீன், செல்வி யோகலிங்கம் லாவண்யா, செல்வி மயில்வாசன் தினேகா, செல்வி ரஞ்சன் பிறைவிழி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அத்தோடு தமிழ், இலக்கணப் போட்டி பிரிவு- IV இல் செல்வி ரஞ்சன் பிறைவிழி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார். தேசிய மட்டத்தில் வெற்றியீட்டியமை வித்தியாலயத்தின் வளர்ச்சிப் பாதையின் உச்சக்கட்ட வளர்ச்சியை காட்டி நிற்கின்றது. அத்துடன் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக அதிபர் பதவி வழியாக இருந்து சங்கத்தை மிகச் சிறப்பாகச் செயற்படுத்தி வருகின்றார். வெளிநாட்டுப் பழைய மாணவர்கள் பலரை இதில் இணைத்து வைரவிழாவிற்கு முன்னரான பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அவர்களால் முன்னெடுக்கப் படுகிறது. நிர்வாகத்திறனுடைய அதிபர் திரு.த. பிறேமச்சந்திரன் அவர்கள் ஆசிரியர், அதிபர், ஆசிரிய ஆலோசகர், உதவிக்கல்விப்பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர் போன்ற பல பதவி நிலைகளில் சேவையாற்றியுள்ளார், இவரது சேவை தொடரவும் வளர்ச்சியடையவும் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கி வித்தியாலய முன்னேற்றத்தில் இணைந்து கொள்வோம். இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது இணைந்து கொண்ட முதல் மாணவன் திரு ந.அருணகுலசிங்கம் ஆவார். ஆரம்பக்கல்வி தொடக்கம் க.பொ.த (சா/த) வரை கற்று பட்டப் படிப்பை நிறைவு செய்த முதல் மாணவன் திரு.தம்பு பாலசுப்பிரமணியம். க.பொ.த (உ/த) கலைப்பிரிவில் இதே பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகம் சென்ற முதல் மாணவி செல்வி சுப்பிரமணியம் ரோகினி. தமிழ்த்தினப் போட்டியில் பாவோதல் நிகழ்வில் தேசியமட்டத்தில் முதல் இடத்தைப் பெற்ற முதல் மாணவன் செல்வன் ஜெயந்திரன் அவர்களையும் இவர்களைப்போல பாடசாலைக்குப் பெருமையும் புகழும் தேடித்தந்த மாணவர்களையும் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது. ஒரு பாடசாலையின் வளர்ச்சியை அல்லது முன்னேற்றத்தை அதிபர், ஆசிரியர்கள் மாத்திரம் ஏற்படுத்தி விட முடியாது. பாடசாலைச் சமூகத் தோடு சேர்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டிய செயலாகும். இவ் வித்தியாலயத்தைப் பொறுத்த வரை இப்பகுதி வாழ் பெற்றோர், பழைய மாணவர்கள், வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடக்கம் கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் இப்பிரதேச அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், கல்வித்திணைக்களங்கள், புலம் பெயர்வாழ் அபிவிருத்தி ஒன்றியம், புலம்பெயர் வாழ் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் காலத்துக்கு காலம் வித்தியாலயத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பின் முழு வடிவம் தான் இன்று வைரவிழாக் கோலம் பூண்டிருக்கும் மு/யோகபுரத் தாய் என்பதை நன்றியுடன் நினைவிற் கொள்வது பொருத்தமானது. அரச சுற்றறிக்கைகளுக்கு அமைய பாடசாலைகளில் பழைய மாணவர்கள் சங்கம் என்ற ஒரு சங்கம் பாடசாலையில் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. ஆயினும், 2013ம் ஆண்டின் பின்னர் உரியவர்களால் முறையாக வழிநடாத்தப் படாமையால் அதன் செயற்பாடுகள், பணிகள் சற்றுக் குறைவடைந்திருந்தது. எனினும் அதிபர் திரு.த.பிறேமச்சந்திரன் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்றதன் பின்னர் அதனை மீளவும் புத்துயிர் பெற வைத்த பெருமையும் அவரையே சாரும். இச்சங்கத்தின் செயற்பாடுகள் மிகக் குறுகிய காலத்தில் பெருவளர்ச்சி அடைந்துள்ளது. வெளிநாட்டு, உள்நாட்டு பழைய மாணவர்கள் இதில் இணைந்து வைரவிழாவிற்கு முன்னரான பாடசாலையின் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் வைரவிழாச் செயற்பாடுகளுக்கும் பல வழிகளில் உதவி புரிந்து வருகின்றனர். 1962ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையின் முன்புறம் தற்போது விளையாட்டு மைதானம் உள்ள இடத்தில் நில அளவைத் திணைக்களம் அமைந்திருந்தது. அத் திணைக்கள அதிகாரிகளும் பணியாளர்களும் பாடசாலையின் காணியைத் துப்பரவு செய்து கொடுப்பது தொடக்கம் பாடசாலையின் பல்வேறு தேவை களையும் பூர்த்தி செய்து பாடசாலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையில் பௌதீக வளங்களை நோக்கும் போது ஆரம்பத்தில் இரு தாய்க் கட்டடங்களுடன் அதிபர் விடுதி, ஆசிரியர் விடுதிகள் இரண்டு என்பவற்றினோடு ஆரம்பிக்கப் பட்டிருந்தது. பாடசாலையின் வளர்ச்சிப் போக்கினைக் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சு, மாகாணக் கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் மூலம் பல கட்டிடத் தொகுதிகள் வழங்கப்பட்ட வகையில் 100’x 20’யில் இரு வகுப்பறைக்கட்டிடங்கள், 100’x 20’யில் தற்போது அலுவலகம் அமைந்துள்ள மாடிக் கட்டிடம் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் இடைநிலை விஞ்ஞான ஆய்வுகூட மாடிக்கட்டடம், நான்கு வகுப்பறைகள் கொண்ட மாடிக்கட்டடம், நவீன ஆய்வுகூடம், மாணவிகளுக்கான நவீன மலசல கூடத்தொகுதி, ‘கம்பரெலிய’ திட்டத்தின் கீழ் மைதான முன்புற மதில், இரவு விளையாட்டுக்களுக்கான மின் ஒளி அமைப்பு, பிரதேச நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர்த் தொகுதிகள், அலுவலக கட்டடத்திற்கு முன் புறமுள்ள அலங்கார அரை மதில், புதிய கொடி மேடை என்பவற்றோடு அபிவிருத்தி ஒன்றியம், பழைய மாணவர் சங்கம், புலம் பெயர் வாழ் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என்பவர்களது பங்களிப்புடன் விளையாட்டு உபகரணங்கள், C.C.T கமரா, வைரவிழா மலர் வெளியீடு, T.சேட், மைதான மதில் வேலைகள், பாடசாலை முன்புற மதில், ஆசிரியர் விடுதிகள் திருத்தம், பிரதான மண்டபம் திருத்துதல், நுழைவாயில் தொடக்கம் அலுவலகம் வரையான இருபக்க அலங்கார வளைவு, பாடசாலை வளாகம் துப்பரவு, மட்டப்படுத்தல், திறன் வகுப்பறை அமைத்தல், பாடசாலைக்கான மணி, கதிரைகள், சாதனையாளரின் பெயர்கள் காட்சிப்படுத்தல், நுழைவாயில் கதவுகள், கட்டடங்களுக்கு இடையான நடைபாதை, கூரை, பாடசாலை வாழ்த்துப்பாடல், Speech stand, நீர்த்தாங்கி, செப்பனிடல், நீர்விநியோகம், ஆய்வுகூட சுருக்குக் கதவு, ஆசிரியர்களுக்கான வாகனத் தரிப்பிடம், பான்ட் உடை, மதில் வர்ணப் பூச்சு, பெரிய குத்து விளக்கு செற் போன்ற பல அபிவிருத்தி வேலைகள் வைரவிழாவினை முன்னிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மு/யோகபுரம் மகா வித்தியாலத் தோற்றம் பொலிவு கண்டுள்ளது. அத்தோடு இவ் வித்தியாலயம் 2022 இல் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டமை பாடசாலை வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டு நிற்பது பெருமை தரும் விடயமாக பதிவாகின்றது. குறிப்பு: ஒரு பிரதேசம் அல்லது நிறுவனம், அல்லது பாடசாலை இவற்றைப் பற்றி ஒவ்வொரு காலகட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகள், சம்பவங்களை அடுத்த சந்ததியினருக்கு அங்கு வாழ்கின்றவர்கள் அல்லது கடமை புரிபவர்கள் பதிவிட்டுச் செல்வது அவசியமாகின்றது. இப்பாடசாலை பிரதேசத்தின் கல்விப் பொக்கிசம் அதன் ஆரம்பம், வளர்ச்சிப் போக்கு, வெற்றிகள், உதவிகள், சேவைகள், வெளியீடுகள் பற்றித் தொகுத்துப் பதிவிடுவது இப்பிரதேசத்தில் வாழும் எமது கடமை. இப்பாடசாலையின் மாணவி, பழைய மாணவி, தொண்டர் ஆசிரியர், பெற்றோர், பிரதி அதிபர் போன்ற நிலைகளில் சுமார் 32 வருடங்களுக்கு மேலாக நெருங்கிய தொடர்புடையவர் என்ற வகையில் பொன்விழா மலருக்கான ‘எமது பாடசாலையின் வரலாறு’ பற்றி பதிவிட்ட நான், வைரவிழா காலம் வரை இம் மலரில் பதிவிட்டுள்ளேன். பாடசாலையின் வரலாற்றை பத்தாண்டு நிறைவு மலர், யோக தாரகை, பொன்விழா மலர், சம்பவத்திரட்டுப் பதிவு 1983 – 2022 வரை என்பவற்றுடன் எனது மனப்பதிவுகளை இணைத்து முழுமையாகத் தர முயன்றுள்ளேன். குறையிருப்பின் நிறைவு பெற ஆலோசனைகள் வழங்கியுதவுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். அன்று, செல்வி. சுப்பையா புஸ்பவதி மாணவி இன்று, திருமதி. புஸ்பவதி பாலசுப்பிரமணியம் பழைய மாணவி, ஓய்வு பெற்ற பிரதி அதிபர்- மு/யோகபுரம் ம.வி.