19.06.2026 – 21.06.2026 வார இறுதி வதிவிடப் பயிற்சி
மு/யோகபுரம் மகா வித்தியாலயம்
மு/யோகபுரம் மகா வித்தியாலயத்தில் 2026.06.19 முதல் 2026.06.21 வரை மூன்று நாட்கள் கொண்ட வார இறுதி வதிவிடப் பயிற்சி கிளாரட் சிறுவர் கதம்பத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாணவர்களின் ஆளுமை விருத்தி, தம்மைப் பற்றி அறிதல் மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி, பல்வேறு பயனுள்ள அமர்வுகள் மற்றும் செயற்பாடுகளுடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இப்பயிற்சியின் ஆரம்பமாக “நான் யார்?” என்ற தலைப்பின் கீழ் மாணவர்கள் தங்களைப் பற்றி சிந்தித்து, தங்களது பலம், பலவீனம், திறமைகள் மற்றும் தனித்துவங்களை அடையாளம் காணும் என்னைப் பற்றிய அறிதல் பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் மூலம் தன்னம்பிக்கையுடன் தங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு உருவாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உணர்வுகள் அழகானவை, என்னைத்தேடி, வீடு, அறச் செயற்பாடுகள், தலைமைத்துவம் மற்றும் எனது வாழ்வின் குறிக்கோள் போன்ற முக்கிய தலைப்புகள் தொடர்பான கலந்துரையாடல்கள், குழுச் செயற்பாடுகள், விளையாட்டுகள் மற்றும் சிந்தனைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் தங்களது உணர்வுகளை சரியான முறையில் கையாளுதல், நல்ல பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்தல், பொறுப்புணர்வுடன் வழிநடத்தும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல் போன்ற விடயங்களில் ஆழமான புரிதலைப் பெற்றனர். இவற்றுடன் தியானம் மற்றும் வழிபாடு போன்ற ஆன்மீக செயற்பாடுகளும் இடம்பெற்றது.
மேலும், எதிர்கால வாழ்க்கைக்கான தெளிவான இலக்குகளை வகுத்து, அவற்றை அடைவதற்கான திட்டமிடல் மற்றும் முயற்சிகளின் அவசியம் பற்றியும் மாணவர்கள் வழிநடத்தப்பட்டனர். பல்வேறு அனுபவப் பகிர்வுகள் மற்றும் செயன்முறைப் பயிற்சிகள் மூலம் மாணவர்களின் ஒத்துழைப்பு, தொடர்பாடல், முடிவெடுக்கும் திறன் மற்றும் குழு உணர்வு என்பனவும் மேம்படுத்தப்பட்டன.
இவ்வதிவிடப் பயிற்சி மாணவர்களின் சிந்தனைகளை செம்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு, நல்லொழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் நேர்மறை ஆளுமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள உதவியாக அமைந்தது. மேலும், தங்களது எதிர்கால இலக்குகளை தெளிவாக வரையறுத்து, வாழ்க்கைப் பயணத்தை அர்த்தமுள்ள வகையில் முன்னெடுக்க வேண்டிய ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் இப்பயிற்சி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




